×

கிராம மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டுவதா? ஊராட்சி அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ் சிறைபிடித்து போராட்டம்

பொன்னேரி, நவ. 12: மீஞ்சூர் அருகே ரெட்டிப்பாளையத்தில் முறையாக குடிநீர் வழங்குவதில் அலட்சியம் காட்டிவரும் ஊராட்சி அதிகாரிகளை கண்டித்து அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.  மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் ஊராட்சியில் ரெட்டியபாளையம், அத்தமஞ்சேரி, சோமஞ்சேரி ஆகிய காலனி மற்றும் கிராமப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால் கடந்த 3 மாதத்துக்கு மேலாக மின்மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. அப்பகுதியினர் குடிநீருக்கு பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.  நிலத்தடி நீரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் ஏழை மக்களுக்கு வாந்தி, பேதி உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. இப்பிரச்னை குறித்து மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மகளிர் குழுக்களும், கிராம மக்களும் புகார் தெரிவித்தனர். எனினும், இங்கு குடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் என 100க்கும் மேற்பட்டோர் அத்தமஞ்சேரி - ரெட்டியபாளையம் சாலையில் திரண்டனர். அவ்வழியாக மீஞ்சூர் நோக்கி சென்ற  அரசு பேருந்தை சிறைப்பிடித்தனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. பஸ்சில் பயணித்த மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, தனியார் நிர்வாக ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்ததும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு, மேற்கண்ட பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், பழுதான மின்மோட்டாரை சீர்படுத்தவும் உயர் அதிகாரிகளிடம் பேசி துரித நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறினர். இதை ஏற்று சுமார் 2 மணி நேர போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன்பிறகு அரசு பேருந்தை போலீசார் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...