×

திருவள்ளூர், பெருமாள்பட்டு, காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் பயன்பாட்டுக்கு வராத அடிப்படை வசதிகள்

திருவள்ளூர், நவ. 12 : திருவள்ளூர் அருகே திருவூர், பெருமாள்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான அடிப்படை வசதிகள் இருந்தும், 18 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராததால், சீரழிந்து கிடக்கிறது. இதனால், இங்கு வீட்டுமனை வாங்கியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் அடுத்த திருவூரில் மிகப்பெரிய குடியிருப்பு, 2001ம் ஆண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இங்கு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதேபோல், காக்களூர், பெருமாள்பட்டு ஆகிய பகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.  குடியிருப்பு உருவாக்கப்பட்டபோது, மக்கள் பயன்பாட்டிற்காக, ரூ.40 லட்சம் செலவில், 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டன. கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பயன்படுத்துவதற்காக திறக்கப்படவில்லை. இதனால், குடிநீர் தொட்டியும் பராமரிப்பின்றி சேதமடைந்தது. தற்போது, இப்பகுதி மக்கள் அருகில் உள்ள தொழுவூர்குப்பம் கிராமத்திற்கு சென்று குழாய்களில் குடிநீர் பிடித்து கொண்டு வருகின்றனர்.

 இங்கு சுபநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, 2 ஆயிரம் சதுரடியில் ₹5 லட்சம் செலவில் சமுதாயக்கூடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடமும் திறக்கப்படாமல் மூடியே உள்ளதால், சமூக விரோதிகள் சமுதாயக் கூடத்தின் ஜன்னல் மற்றும் கதவுகள் போன்றவற்றை திருடிச் சென்று விட்டனர். வளாகம் முழுவதும் செடிகள் வளர்ந்து, புதர் போல் காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் இப்பகுதியில் நடப்பதற்கே மிகவும் அச்சப்படுகின்றனர். திருவூரில் ஒரு அரசு மாதிரி உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். மாணவ, மாணவியருக்கு போதிய வகுப்பறைகள் மற்றும் கழிப்பிட வசதி இல்லை. திறந்தவெளி மைதானத்தில் மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

சீட்டு விளையாடுவது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் சிலர் இங்கு ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது பெய்துவரும் மழையால், திருவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தெருக்கள், சாலைகளில் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளைச் சுற்றிலும் குப்பைகள் மற்றும் கழிவுநீர், ஏரிபோல் தேங்கிக் கிடக்கிறது. மேலும், இப்பகுதியில் 15 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது.  இதில், மாடியில் உள்ள அறை ஒன்றில் கிளை நூலகம் உள்ளது. மற்றவை அனைத்தும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், இக்கட்டிடமும் சேதமடைந்து உள்ளது. வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றும் வகையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கென கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு உள்ளதே தவிர அதுவும் பயன்பாட்டுக்கு வராததால் பல கோடி ரூபாய் வீணாகி உள்ளது.

தற்போது ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், பாதாள சாக்கடை தொட்டிகள் நிரம்பி, அதிலிருந்து கழிவுநீர் பொங்கி சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், தங்களுக்கு டெங்கு நிச்சயம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.  இதேநிலை, காக்களூர், பெருமாள்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளிலும் உள்ளது. எனவே, திருவூர், காக்களூர், பெருமாள்பட்டு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளையும் சீர்செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Housing Board Board Houses ,Perumalpattu ,Tiruvallur ,
× RELATED அடிப்படை வசதிகள் கேட்டு ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முற்றுகை