×

நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு பிரத்யேக இருக்கையுடன் இ-கழிவறை: மாநகராட்சி திட்டம்


சென்னை: நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பெண்களுக்காக 84 இடங்களில் 150 இருக்கை வசதியுடன் இ-கழிவறை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. நிர்பயா நிதியின் கீழ் பாதுகாப்பான நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதன்படி சென்னை பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய 425.06 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்யப்பட்டது. இதில் 60 சதவீத நிதியான ₹255.03 கோடியை மத்திய அரசும், 40 சதவீத நிதியான 170.03 கோடியை மாநில அரசும் வழங்கும். இந்த திட்டமானது 2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று ஆண்டுகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி சென்னையில் உள்ள பேருந்துகளில் சிசிடிவி கேமிரா அமைப்பது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைப்பது, பெண்களுக்காக இ-கழிவறை, மொபைல் கழிவறைகள், பெண்கள் பாதுகாப்பு படை, இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் தெரு விளக்குகள், அவசரகால தொலைபேசி மற்றும் ெமாபைல் ஆப் உள்ளிட்ட வசதிகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தற்போது அம்மா ரோந்து வாகனம் என்ற பெயரில் பெண்களுக்கான சிறப்பு காவல்படை சென்னை காவல் துறை மூலம் தொடங்கப்பட்டு செயல்படுத்தபட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் பல்வேறு இடங்களில் பெண்களுக்காக இ-கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : நிர்பயா நிதியின் கீழ் சென்னை மாநகராட்சியில் 84 இடங்களில் 150 இருக்கைகள் கொண்ட இ-கழிவறை அமைக்கப்படவுள்ளது.

பெண்களுக்காக மட்டுமே பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த கழிவறைகள் அமைக்கப்படவுள்ளன. இதன்படி கதவுகளில் அலாரம் வசதி, சென்சார் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவுள்ளன. முக்கியமாக பெண்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் குடிசை பகுதிகளில் இந்த கழிவறை அமைக்கப்படவுள்ளது. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், எம்கேபிநகர், முரசொலிமாறன் பூங்கா, அண்ணை சத்யா நகர், எம்எம்டிஏ பேருந்து நிலையம், அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு, காளியம்மன் கோவில் தெரு, காமராஜர் சாலை, உஸ்மான் சாலை, நடேசன் சாலை, தாம்பரம் வேளச்சேரி மெயின் சாலை, கண்ணகி நகர் உள்ளிட்ட 84 இடங்களில் அமைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சானிடரி நாப்கின்
கழிவறைகளில் சானிடரி நாப்கின் உள்ளிட்டவைகளை வழங்கும் இயந்திரங்களை நிறுவ விரும்புவர்கள் சென்னை மாநகராட்சியை தொடர்பு ெகாண்டு அனுமதி பெற்று நிறுவலாம்.

மண்டலம்    இருக்கைகள்
திருவொற்றியூர்    4
மணலி                       2
மாதவரம்                      2
தண்டையார்பேட்டை    6
ராயபுரம்                      4
திரு.வி.க.நகர்    17
அம்பத்தூர்    4
அண்ணாநகர்    4
தேனாம்பேட்டை    16
கோடம்பாக்கம்    48
வளசரவாக்கம்    0
ஆலந்தூர்    8
அடையாறு    2
பெருங்குடி    3
சோழிங்கநல்லூர்    30


Tags :
× RELATED இ-டாய்லெட்டுக்குள் சிக்கிக் கொண்ட...