மத்திய சென்னை எம்பி அலுவலகத்தை உதயநிதி திறந்தார் பொதுமக்கள் குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்: உடனடியாக தீர்வு ,.. தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தை திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். மேலும், பொதுமக்கள் தங்களது குறைகளை வாட்ஸ்அப்பில் தெரிவிக்கலாம், அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாநிதி மாறன் எம்பி தெரிவித்தார். மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனின் தொகுதி அலுவலகம் சென்னை நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்கா அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, அலுவலகத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

தொடர்ந்து, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளரும் ராஜ்ய சபை எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அலுவலக பணிகளை துவக்கி வைத்தனர். இதற்கு முன்பாக அலுவலக வளாகத்தில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்எல்ஏ, கு.க.செல்வம் எம்எல்ஏ, ரங்கநாதன் எம்எல்ஏ, 113வது வட்ட செயலாளர் நுங்கை ப.மகேஷ், பகுதி செயலாளர் மா.பா.அன்புதுரை, தலைமை பொதுக்குழு உறுப்பினர் நுங்கை வி.எஸ்.ராஜ், அன்பகம் கலை, மாவட்ட வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த  கே.ெஜ.சரவணன், நிர்வாகிகள் வெங்கடேசன், ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதன்பிறகு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதன் அடிப்படையில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த அலுவலகத்துக்கு பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து குறைகளை தெரிவிக்கலாம். மேலும், வாட்ஸ்அப் எண் மூலம் தங்களது குறைகளை கூறலாம். அந்த பிரச்னைகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு, அது தொடர்பான புகைப்படங்கள் சம்பந்தப்பட்டவர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதவிர எம்பி அலுவலக இ-மெயில் முகவரி, பேஸ்புக், டிவிட்டர் மூலமாகவும் என்னிடம் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் இவைகள் அனைத்தும் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.” இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.

Related Stories: