மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆழ்துளை கிணறுகளின் விவரம் சேகரிப்பு: அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளன என்ற விவரங்களை சேகரிக்க, ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த மாதம் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திறந்தநிலை ஆழ்துளை கிணறுகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஆழ்துளை கிணறு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதன்படி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 2017ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி பெறுவது தொடர்பான பணிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் மையம் நிர்வாக அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சென்னை குடிநீர் வாரிய  அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு தொடர்பாக தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலங்கள், வார்டு அலுவலங்கள் என்று மொத்தம் 350 கட்டிடங்கள் உள்ளன.

282 பள்ளி கட்டிடங்களும், 18 பெரிய மருத்துமனைகள் என்று மொத்தம் 700க்கு மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்களில் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளன என்பதை மண்டல அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பணி 7 நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த அறிக்கை உயர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும். இதைத் தவிர்த்து  சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள காலி இடங்களில் ஆழ்துளை கிணறு ஏதாவது உள்ளதா என்று ஆய்வு செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>