×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அரிசி ஒதுக்கீடு 23 சதவீதம் குறைப்பு

திருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை மாவட்டத்தில், ரேஷன் அரிசி ஒதுக்கீடு 23 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கார்டுகளுக்கும் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 520 பகுதி நேர ரேஷன் கடைகள் உள்பட மொத்தம் 1,627 கடைகள் செயல்படுகின்றன. அதில், 6.35 லட்சம் குடும்பங்கள் ரேஷன் பொருட்களை பெற்று வருகின்றன. வெளி மார்க்கெட்டில் உணவு பொருட்களின் விலை வெகுவாக உயர்ந்திருக்கிறது. எனவே, ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆனால், திருவண்ணாமலை மாவட்டத்துக்கான ரேஷன் அரிசி ஒதுக்கீடு கடந்த சில மாதங்களாக 77 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அரிசி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யும் அரிசி மூட்டைகள் ஒவ்வொன்றிலும் அதிகபட்சம் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைந்திருக்கிறது. எனவே, எடை குறைவினால் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் ஒதுக்கீடு குறைவு போன்றவற்றால், பொதுமக்களுக்கு அரிசி விநியோகிப்பது பெரிதும் பாதித்திருக்கிறது.

ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் அரிசியின் மொத்த அளவில், மாதத்தின் முதல் வாரத்தில் 60 சதவீதமும், 15ம் தேதிக்கு பிறகு 40 சதவீதமும் விநியோகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில மாதங்களாக மாதத்தின் இறுதி வாரம் வரை இரண்டாவது பகுதி அரிசி ஒதுக்கீடு ரேஷன் கடைகளுக்கு வந்து சேருவதில்லை என்ற புகாரும் உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் தேவையான அளவைவிட, குறைந்த அளவில் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுவதால், எந்த நாளில் அரிசி வழங்கப்படுகிறது என்ற விபரத்தை விற்பனையாளர்கள் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை. முதலில் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கிவிட்டு, பின்னர் அரிசி இருப்பு இல்லை என்கின்றனர். எனவே, கிராமப் பகுதிகளில் அரிசி வாங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தாமதித்து வந்தால் அரிசி கிடைக்காது என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை தற்போது நகர பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கிறது.

கிராமப்பகுதி ரேஷன் கடைகளில், கடைகள் திறக்கும் முன்பே வரிசையில் காத்திருப்பதும், வரிசைக்கான இடத்தை பிடிக்க பைகளை வரிசையில் வைத்திருப்பதும் இப்போதும் தொடர்ந்து நடக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருகே இனாம்காரியந்தல் கிராமத்தில் ரேஷன் அரிசி வாங்க காத்திருந்த மூதாட்டி, நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நடந்தது. அதன்பிறகும், ரேஷன் கடைகளுக்கான அரிசி ஒதுக்கீடு உயர்த்தவில்ைல. ஸ்மார்ட் கார்டு வடிவிலான ரேஷன் கார்டுகள் நடைமுறைக்கு வந்த பிறகு, போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இல்லை. எனவே, ரேஷன் பொருட்கள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.  எனவே, நூறு சதவீத அரிசி ஒதுக்கீடு அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டால், எந்த நாளில் சென்றாலும் அரிசி பெற முடியும் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்படும். ரேஷன் கடைகளில் காத்திருக்க வேண்டிய நிைலயும், தள்ளுமுள்ளு ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.

Tags : shops ,Thiruvannamalai district ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி