×

முதல்வரின் மக்கள் குறை கேட்பு முகாமில் வழங்கிய 46 ஆயிரம் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்படுமா?

திருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மக்கள் குறைகேட்பு முகாமில் பெறப்பட்ட 46 ஆயிரம் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர் மக்கள் குறைகேட்பு முகாமை சேலம் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பு துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 9,72,216 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கலசபாக்கம், ஜவ்வாது மலை, ஆரணி, கீழ்பென்னாத்தூர், செய்யாறு, செங்கம், தண்டராம்பட்டு, போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம் உள்ளிட்ட 12 தாலுகாவை உள்ளடக்கிய 1,070 வருவாய் கிராமங்கள், 123 நகராட்சி வார்டுகள் மற்றும் 155 பேரூராட்சி வார்டுகளில் பொதுமக்களிடமிருந்து 46,418 மனுக்கள் பெறப்பட்டது. இதையொட்டி, ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட குழுவினர் கிராமங்களில் முகாமிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, மனுக்கள் மீது அதிகாரிகள் துறை வாரியாக விசாரணை மேற்ெகாண்டு பயனாளிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்ேதர்தலையொட்டி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அங்கு முகாமிட்டதால் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தள்ளிப்போனது. முதல்வரின் மக்கள் குறைகேட்பு முகாம் என்பதால், கிராமப்புறங்களில் வழக்கத்தைவிட அதிகமான அளவில் பொதுமக்கள் மனுக்களை அளித்திருந்தனர். ஆனால் தகுதியான  பயனாளிகளை தேர்வு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் காலதாமதம் ஆவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : camp ,CM ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு