×

பெரணமல்லூர் பிடிஓ அலுவலகத்தில் ஆய்வு இலவச வீடு கட்டும் பயனாளிகளை திண்டாட விடாதீர்கள்

பெரணமல்லூர், நவ.8: இலவச வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை திண்டாட விடாமல் மனசாட்சியுடன் செயல்பட்டு அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு வழங்கும் திட்டம் குறித்து சேத்துப்பட்டு, தெள்ளார், செய்யாறு உள்ளிட்ட பிடிஓ அலுவலகங்களில் கலெக்டர் கந்தசாமி நேற்று முன்தினம் அதிரடியாக ஆய்வு செய்தார். இரவு 8 மணியளவில் பெரணமல்லூர் பிடிஓ அலுவலகத்திலும் ஆய்வு செய்தார். அப்போது, பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பசுமை வீடு திட்டம் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார்.
அப்போது பதிவேடுகளில் குறிப்பிட்ட சிலரின் முகவரிகளை எடுத்து கம்ப்யூட்டரில் சரியாக உள்ளதா என சரிபார்த்தார். அதில் மாறுபாடு வந்ததால் பிடிஓ, இன்ஜினியர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார்.

‘இங்கு வீடு கேட்டு வரும் ஒவ்வொரு நபரும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி நலிவுற்ற ஏழைகளே. வசதியானவர்கள் யாரும் வீடு கேட்டு வருவதில்லை. வீடு கேட்டு வரும் ஏழை மக்களுக்கு நீங்கள் வீடு கட்ட வழங்கும் ஆர்டரை கொடுத்தவுடன் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த அலுவலகத்தில் வந்து படியேறி செல்லும்போது அவர்களின் காது, மூக்கு, கைகளில் இருந்த தங்க நகைகள் குறைந்து படிப்படியாக அவர்களது கழுத்தில் மஞ்சக்கயிறு மட்டுமே மிஞ்சும். வீடு கட்டி முடிக்கும்போது அவர்களின் பாடு மிகவும் திண்டாட்டமாக அமையும்.  இதை பார்க்கும் மற்றவர்களும் இலவச வீடே வேண்டாம் என ஓடிவிடும் சூழலுக்கு தள்ளப்படுவார்கள். நீங்கள் மனசாட்சியுடன் செயல்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும். அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிமென்ட் பற்றாக்குறை ஏற்பட்டால் பசுமை வீடு திட்டத்தில் உள்ள சிமெண்ட் அவர்களுக்கு கொடுக்கலாம்.

தனியாருக்கு விற்பதில் குறியாக இருப்பதால் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நீங்களே அருகிலுள்ள செங்கல் சூளை அதிபர்கள், கருங்கல் விற்பவர்கள் என அவர்களிடம் நேரில் பேசி  குறைந்த விலையில் பொருட்களை வாங்கி தர முன்வர வேண்டும். சிமென்ட், கம்பிகளை  அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நேரடியாக வாகனங்களில் உங்கள் செலவில் சென்று இறக்கி வைக்க வேண்டும். வீடு கட்டும் நிதியினை அட்வான்சாக கொடுக்க முன்வர வேண்டும். உங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து முழுமையாக வீடு கட்டி முடிக்க உதவ வேண்டும். இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.அப்போது பிடிஓக்கள் ரேணுகோபால், சத்தியமூர்த்தி, ஒன்றிய பொறியாளர்கள் ரமேஷ், திவாகர் மற்றும் அலுவலக ஊழியர்கள் உடனிருந்தனர்.

சுகாதார சீர்கேட்டில் அலுவலக கழிவறை
முன்னதாக, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி காரில் இருந்து இறங்கி உள்ளே சென்றபோது, பெரணமல்லூர் பிடிஓ அலுவலகத்தில் உள்ள பொதுக்கழிப்பிட அறையில் இருந்து தண்ணீர் வெளியேறி கொண்டிருந்தது. இதை கவனித்த கலெக்டர், ஊருக்கெல்லாம் சுத்தம் குறித்து சொல்லும் நீங்கள், உங்கள் அலுவலகத்தில் இப்படி சுகாதாரமின்றி வைத்திருக்கிறீர்களே? என வினவினார்.

Tags : house ,office ,Peranamallur PDO ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்