×

சேதமடைந்த பைப்லைனை சீரமைக்காததால் காட்சிப் பொருளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவண்ணாமலை, நவ.8: துரிஞ்சாபுரம் அருகே தனகோட்டிபுரம் கிராமத்தில் சேதமடைந்துள்ள பைப்லைனை சீரமைக்காததால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வெறும் காட்சி பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. துரிஞ்சாபுரம் ஒன்றியம், பொற்குணம் ஊராட்சிக்குட்பட்டது  தனக்கோட்டிபுரம் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவருக்கு குடிநீர் விநியோகம் செய்ய அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 2012-13ம் ஆண்டு ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழுதுபார்க்கப்பட்டது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் பைப்லைன் சேதமடைந்தது. நீர்த்தேக்க தொட்டியில் இருந்து 10 மீட்டர் தொலைவில் பைப்லைன் உடைந்துள்ளது. இதனை சீரமைக்காததால் வெறும் காட்சி பொருளாகவே இருந்து வருகிறது என்கின்றனர் கிராம மக்கள்.

ஆனால், சேதமடைந்துள்ள பைப்லைன் சீரமைக்காமல், பள்ளிக்கு அருகே மினி டேங்க் அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த மினிடேங்கில் இருந்து தெருவில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களுக்கு தண்ணீர் செல்வது கிடையாது. அனைவரும் இங்கு வந்து தான் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும் என்பதால் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், அருகில் உள்ள ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதிலிருந்து தான் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதில் குடிநீர் தொட்டிக்கு வரும் பைப்லைன் ஏரிப்பகுதியில் சேதமடைந்துள்ளது. இந்த பைப்லைனை சீரமைக்காததால், அதன் வழியாக ஏரியில் உள்ள தண்ணீர் கலந்து, சுகாதாரமற்ற குடிநீராக வருகிறது. இந்த பைப்லைனை சீரமைக்க பலமுறை தெரிவித்தும், எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்துள்ள பைப்லைன்களை சீரமைத்து, அனைத்து வீதிகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...