×

போளூர் அடுத்த செங்குணம் கிராமத்தில் உயிர் பலி வாங்கும் கிரானைட் குவாரியை மீண்டும் திறக்க கூடாது

போளூர், நவ.8: போளூர் அடுத்த செங்குணம் கிராமத்தில் உயிர்பலி வாங்கும் கிரானைட் குவாரியை மீண்டும் திறக்க அனுமதிக்க கூடாது என கருத்து கேட்பு கூட்டத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் கிராம மக்கள் தெரிவித்தனர்
போளூர் அடுத்த செங்குணம் கிராமத்தில் மலையில் உள்ள கிரானைட் கற்களை கடந்த 2005ம் ஆண்டு முதல் 2034ம் ஆண்டு வரை 30 ஆண்டுகளுக்கு வெட்டி எடுத்து கொள்ள தமிழ்நாடு கனிம நிறுவனம் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து அந்த நிறுவனம் சார்பில் குவாரி அமைக்கப்பட்டு கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டு வந்தது.   கடந்த 2014ம் ஆண்டு குவாரியில் நடந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த கிரானைட் குவாரி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்றால் தான் குவாரியை மீண்டும் திறக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. எனவே, இதுதொடர்பாக செங்குணம் கிராம மக்களின் கருத்துகளை கேட்டு, அதனை அறிக்கையாக அனுப்பும்படி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்று போளூர் அடுத்த குன்னத்தூர் கூட்ரோடில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வ.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். கனிம வள நிறுவன துணை மேலாளர்(சுரங்கம்) க.கணேசன் வரவேற்றார்.   முன்னதாக, கிரானைட் குவாரி செயல்படுத்தும் விதம், அதனால் ஏற்படும் வளர்ச்சி ஆகியன குறித்து செயற்கை கோள் படங்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது பொதுமக்கள், கிரானைட் குவாரி செயல்படுவதற்கு முன்பு அந்த மலை அழகாக காட்சி அளித்தது. இப்போது அந்த நிலையை பாருங்கள். மலையை சுற்றிலும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகள் உள்ளது.  ஏற்கனவே குவாரி நடந்தபோது செங்குணம் கிராமத்திற்கு எந்த நிதியும் கிடைக்கவில்லை.

குவாரியில் விதிமீறல் காரணமாக 3 உயிர்கள் பலியாகி விட்டது. அதிகாரிகள் கூறும் எந்த சமாதானத்தையும் நாங்கள் ஏற்க தயாராக இல்லை. இயற்கை வளத்தை அழித்து அதனால் கிராமத்திற்கு ஏற்படும்  வளர்ச்சி தேவையில்லை. எனவே மீண்டும் குவாரி நடத்த அனுமதிக்க முடியாது. மக்கள் நன்மையை மட்டும் பார்க்க வேண்டும். கலெக்டர் இந்த குவாரியை மீண்டும் திறக்க அனுமதி தரக்கூடாது என ஆவேசமாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் மனுக்களை பெற்று கொண்டார். மேலும், செங்குணம் மலை பகுதிக்கு சென்று பார்வையிட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
 இதில் சுற்றுச்சூழல் துணை மேலாளர் கே.விஜயகுமார், விழுப்புரம் கோட்ட மேலாளர் கே.சக்திவேல், மாவட்ட உதவி பொறியாளர் சுபாஷினி, தாசில்தார் பா.ஜெயவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என்.சுப்பிரமணியன், பா.ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் க.கலைவாணி, கிராம நிர்வாக அதிகாரி மீனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Granite Quarry ,village ,Chengunam ,Polur ,
× RELATED பழவேற்காடு அடுத்த கோடைக்குப்பம் மீனவ...