×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தை 6 ஒன்றியங்களில் செயல்படுத்த முடிவு

திருவண்ணாமலை, நவ.8:  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது.    அதற்கான நிதியை உலக வங்கி வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில், ஊரக தொழில் முனைவுகள் உருவாக்குதல், நிதி சேவைகளுக்கு வழிசெய்தல் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழ்நாடு புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முதலீடுகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் மூலதனங்களை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களுக்கு உட்பட்ட 120 ஒன்றியங்களில், 3,994 கிராம ஊராட்சிகளில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், 6 ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில்    47 ஊராட்சிகள், வந்தவாசி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகள், கலசபாக்கம் ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளில் முதற்கட்டமாகவும், கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் 45 ஊராட்சிகள், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 49 ஊராட்சிகள், தெள்ளாறு ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் இரண்டாம் கட்டமாகவும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதன்மூலம், மாவட்டத்தில் மொத்தம் 308 கிராம ஊராட்சிகள் பயன்பெறும்.இத்திட்டத்தில்,    பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் பயன்பெறுவார்கள். திருவண்ணாலை மாவட்டத்தில், இத்திட்டத்தின் மூலம் 31,692 பேர் நேரடியாக பயன்பெறுவார்கள். மேலும், தொழில் முனைவோர் பயிற்சி மூலம் 6,160 பேர் பயன்பெறுவார்கள்.  இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர். திருவண்ணாமலை காந்தி நகரில் செயல்படும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvannamalai District ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21...