உடைந்த கால்வாய் சிலாப்புகளால் பயணிகள் பீதி

வேலூர், நவ.8:   வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தினமும் 750க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், புதிய பஸ் நிலையத்தில் கால்வாய்கள் மீது போடப்பட்ட தரமற்ற சிமென்ட் சிலாப்புகள் ஆங்காங்கே உடைந்து கிடக்கிறது. மேலும் கால்வாய் சிலாப்புகள் ஆங்காங்கே விரிசல்களுடன் காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பஸ் நிலைய மின்விளக்குகள் எரியாமல் இருப்பதால், பயணிகள் பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்கின்றனர். மேலும் பஸ் டிரைவர்கள் பஸ்சை திருப்ப முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். அவ்வப்போது, பஸ் சக்கரங்கள் கால்வாய் பள்ளங்களில் சிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இதனால், புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை இயக்குவது பெரும் சாகச செயலாகவே நாங்கள் கருத வேண்டியிருப்பதாக டிரைவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தரமின்றி சிமென்ட் சிலாப்புகள் போடப்பட்டதே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகின்றனர். இந்நிலையில், ஆங்காங்கே கால்வாய் சிலாப்புகள் உடைந்து கிடக்கின்றன. இந்த அபாய பள்ளங்களை அடையாளம் காண்பிக்க குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.  தரமின்றி கால்வாய் சிலாப்புகள் போடப்பட்டதே இதற்கு காரணம். தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றால், பள்ளங்கள் தெரியாமல் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக வேலூர் புதிய பஸ்நிலையத்தில் உள்ள கால்வாய்களுக்கு தரமான சிமென்ட் சிலாப்புகளை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: