பெயரளவில் மட்டுமே பொருத்தி உள்ளனர் வாகனங்களில் செயல்படாத வேக கட்டுப்பாடு கருவி

வேலூர், நவ.8: வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பெயரளவிற்கு மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவிகள் செயல்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4.64 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்த விபத்துகளில் 4.70 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். 1.48 லட்சம் பேர் பலியாகி இருப்பதுதான் அதிர்ச்சியான தகவல். இந்தியாவில் தினமும் 405 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருந்தாலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  பெரும்பாலான விபத்துகளுக்கு அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, தவறான பாதையில் செல்வது, கவனக்குறைவு உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது. இதனால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டு முதல் சரக்கு வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி ெபாருத்துவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. இதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டியது கட்டாயம். இதுதவிர பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு வேக கட்டுப்பாடு கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாகனங்களை எப்சி செய்ய கொண்டு செல்லப்படும்போது, வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதித்தே எப்சி செய்யப்படுகிறது.

Advertising
Advertising

இந்நிலையில், வேக கட்டுப்பாடு கருவி பொருத்தினால் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் வாகனங்களை இயக்க முடியாது என்பதால், இணைப்பை துண்டித்துவிட்டு பெயரளவிற்கு வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவிகளை பொருத்தியிருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், விபத்துகளை குறைக்க முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதேபோல், பைக் ரேஸ் நடத்தும் வாலிபர்களால் சாலைகளில் நடந்து செல்பவர்கள் அச்சமடைகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தனியார் பஸ்கள், லாரி உட்பட பெரும்பாலான வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவிகள் பெயரளவிற்கு பொருத்திவிட்டு இணைப்பை துண்டித்து வைத்துள்ளனர். ஒரு சில தனியார் பள்ளி, கல்லூரி பஸ்களிலும் வேக கட்டுப்பாடு கருவிகளுக்கு இணைப்பை துண்டித்து வைத்திருப்பதாக தெரிகிறது. இதுபோன்று, எந்தவித வேக கட்டுப்பாடும் இல்லாமல் அதிவேகமாக சீறிப்பாயும் வாகனங்களால் விபத்துக்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல், தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி உள்ளூர் சாலைகளிலும் வாலிபர்கள் பைக் ரேஸ் செல்கின்றனர். இதனாலும், விபத்துகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேக கட்டுப்பாடு கருவி பொருத்துவது தொடர்பாக தீவிர ஆய்வு நடத்த வேண்டும். மேலும் பைக் ரேஸ் செல்வது போன்ற போக்குவரத்து வீதி மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: