மாதனூர் ஒன்றியம் மின்னூரில் குடிநீர் தொட்டி, சாலை சீரமைக்க வேண்டும்

ஆம்பூர், நவ.8: மாதனூர் ஒன்றியத்திற்குட்பட்ட மின்னூரில்  குடிநீர் தொட்டி மற்றும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆம்பூர் அடுத்த  மின்னூர் ஊராட்சியில் பழைய மின்னூர், ஆர்எஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன. இதில் பழைய மின்னூர் பகுதியில் உள்ள  குடிநீர் தொட்டிக்கான மின்மோட்டார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு  பழுதடைந்தது. இதுகுறித்து, அப்பகுதியினர் மாதனூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதுகுறித்து, முதமைச்சரின் சிறப்பு குறைதீர்வு முகாமிலும் அப்பகுதியினர் மனு கொடுத்தனர். மேலும், இதே ஊராட்சியில் உள்ள எம்ஜிஆர் நகர், காமராஜர் நகர், வேலவன் நகர், கணபதி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கான மின்மோட்டார்களும் பழுது காரணமாக இயக்கப்படாததால் குடிநீர் வினியோகம் முடங்கி உள்ளது.

இந்த ஊராட்சியில் உள்ள  எம்சி ரோடிலிருந்து பழைய மின்னூர் பாலாற்றங்கரை வரை செல்லும் தார் சாலை அமைப்பதற்காக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு  ஜல்லி கற்கள் பரப்பி மண் கொட்டப்பட்ட நிலையில் இதுநாள் வரை தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். எனவே,  குடிநீர் தொட்டி மின்மோட்டார்களை உடனடியாக பழுதுபார்த்து குடிநீர் விநியோகம் செய்யவும்,  தார் சாலை அமைக்கும் பணியை உடனடியாக துவங்கவும் அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு பணிகள் தொடங்கவில்லை என்றால் வரும் 17ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: