×

பேரணாம்பட்டில் அடிக்கடி ஏற்படும் ஏடிஎம் பழுதால் பொதுமக்கள் அவதி

பேரணாம்பட்டு, நவ.8: பேரணாம்பட்டில் அடிக்கடி ஏற்படும் ஏடிஎம் பழுது காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பேரணாம்பட்டு நகராட்சியில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பல்வேறு தனியார் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள்,  அரசு அலுவலகங்கள் உள்ளன.  பெரும்பாலான அரசு மற்றும் தனியார் தொழிலாளர்களின் மாதசம்பளம் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. பேரணாம்பட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூன்று மட்டுமே உள்ளதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ளனர். இதனால், பேரணாம்பட்டு நெடுஞ்சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அதிகப்படுத்தினர். அதன்படி 2 பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம், 1 டெபாசிட் இயந்திரம், பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் உள்ளது.

இதனால், வங்கியில் கூட்ட நெரிசல் குறைந்து பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஏடிஎம்கள் மூலம் பணம் எடுத்தும், செலுத்தியும் வந்தனர். ஆனால்  தற்போது பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம் அடிக்கடி பழுது ஏற்பட்டு சரிவர இயங்க வில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின், அவசர தேவைக்காக பணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது.  தனியார் ஆன்லைன் பணபரிவர்தனை மூலம் கணக்கில் செலுத்தினால் அதற்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவையை நம்பி உள்ளதால், இதுபோன்று அடிக்கடி ஏற்படும் இயந்திர பழுதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.  எனவே, தனியார் வங்கிகள் அளிக்கும் சேவையை போல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும் சேவையளிக்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,Paranampadam ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...