டெங்கு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் பள்ளி, கடைகளுக்கு ₹80 ஆயிரம் அபராதம்

திருப்பத்தூர், நவ.8: திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.  இதற்காக மழை நீர் வடிகால்களை சீரமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும், டெங்கு கொசு உற்பத்தியை ஒழிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இப்பணிகளை நாள் தோறும் கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் வந்தனாகார்க் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து டெங்கு பாதிப்பு தொடர்பான பணிகளில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கார்டன் ரோடு, புதுப்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதிகளில் நடந்த டெங்கு தடுப்பு பணிகளை சப்-கலெக்டர் வந்தனாகார்க், நகராட்சி கமிஷனர் சந்திரா, சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் விவேக் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Advertising
Advertising

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்த தனியார் பள்ளிக்கு ₹50 ஆயிரமும், அரசு மாணவிகள் விடுதிக்கு ₹10 ஆயிரம், பாத்திரக்கடைக்கு ₹10 ஆயிரம், மற்றொரு தனியார் பள்ளி மற்றும் விடுதிக்கு தலா ₹5 ஆயிரம் என மொத்தம் ₹80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதவிர குப்பையில்லாத நகராக மாற்றவும் முயற்சித்து வருகிறோம்.  முதல் கட்டமாக புதுப்பேட்டை, கிருஷ்ணகிரி சாலையில் குப்பைகளை வெளியில் கொட்டுபவர்களை கண்காணிக்கும் பணிகளை தொடங்கியிருக்கிறது. பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களுக்கு ₹100 முதல் கட்டமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இது அனைத்து வார்டுகளிலும் அமல்படுத்த உள்ளது. இதற்காக வார்டு ஒன்றுக்கு 3 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட உள்ளது’ என்றனர்.

Related Stories: