நாகச்சேரி குளக்கரையில் விடுபட்ட ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

சிதம்பரம், நவ. 8: சிதம்பரம் நாகச்சேரி குளக்கரையில், விடுபட்ட ஆக்கிரமிப்புகள் நேற்று அகற்றப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள முக்கிய குளங்களை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது. சிதம்பரம் மேற்கு பகுதியில் பதஞ்சலி பூஜித்த பழமை வாய்ந்த நாகச்சேரி குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 73 வீடுகள் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி அதிகாரிகளால் அதிரடியாக அகற்றப்பட்டது. அதில் விடுபட்டிருந்த 3 வீடுகளை நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரத்துடன் சென்றனர். சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், நகராட்சி பொறியாளர் மகாதேவன், பணி மேற்பார்வையாளர் செந்தில்குமார், சர்வேயர் நரேந்திரவர்மன் மற்றும் அலுவலர்கள் சென்றனர்.

அப்போது தவாக மூத்த கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள், 3 வீடுகளின் ஒரு பகுதி ஏற்கனவே இடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு குளத்தை தூர்வார ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி வீடுகள் இடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  வட்டாட்சியர் ஹரிதாஸ் அப்பகுதி மக்களிடம் பேசுகையில், குளக்கரை ஆக்கிரமிப்புகளில், சில வீடுகள் இடிக்கப்படாமல் உள்ளதாக வந்த புகார்களை ஒட்டி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் குறித்து ஏற்கனவே சர்வேயர் மூலம் மார்க் செய்யப்பட்டு அதனை அகற்ற உத்தரவிட்டோம்.  ஆனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்படாததால் தற்போது அதனை அகற்ற வந்துள்ளோம். குளம் தூர்வாரும் பணி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் நடந்து வருகிறது. விரைவில் இந்த குளம் தூர்வாரும் பணி நடக்கும் என்றார். பின்னர் வீட்டு உரிமையாளர்கள் கோரிக்கையை ஏற்று அதிகாரிகள் சர்வேயர் மூலம் மீண்டும் அப்பகுதியை அளந்தனர். அப்போது அந்த 3 வீடுகளின் நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடம் வரை பொக்லைன் மூலம் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED ஸ்மார்ட் சிட்டி பணிக்காக வைகைக்கரை...