×

முஷ்ணத்தை கலக்கிய பிரபல கொள்ளையன் அதிரடி கைது

முஷ்ணம், நவ. 8: முஷ்ணம் வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.  முஷ்ணம் விருத்தாசலம் சாலையில் வசித்து வருபவர் பாரி (66), வழக்கறிஞர் மற்றும் நோட்டரி பப்ளிக் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த மே மாதம் இவரது மாமியாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மனைவி மற்றும் மாமியாருடன் மருத்துவ பரிசோதனைக்காக திருச்சிக்கு காரில் சென்றனர். மாலையில் அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கிரில் கேட் மற்றும் முன்புற கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த பாரி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்ட நிலையில் பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 50 கிராம் எடையுள்ள 5 வெள்ளிக்காசுகள், ஒரு பவுன் தங்கத்தோடு ஆகியவை கொள்ளை போயிருந்தன. கொள்ளையர்கள் முன்பக்க கிரில் கேட் மற்றும் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு பின்பக்க கதவை உடைத்து வெளியே தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கறிஞர் பாரி முஷ்ணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இதேபோல் முஷ்ணம் தெத்து விநாயகர் கோயிலில் பன்னிரு கருடசேவை நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த விழாவில் நெசவாளர் காலனியை சேர்ந்த சரோஜா (54) என்பவர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சரோஜா கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சரடை மர்ம நபர்கள் யாரோ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து சரோஜா முஷ்ணம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகலில் முஷ்ணம் ஆண்டிமடம் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே முஷ்ணம் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடந்து வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்.

உடனே போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் முஷ்ணம் அருகே உள்ள கொழை அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ஸ்டீபன் (38) என தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் வழக்கறிஞர் பாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்ததும், அதேபோல் கோயில் விழாவில் சரோஜா என்பவரிடம் தாலி சரடு திருடியதும் தெரியவந்தது. வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த போது அவருடன் மேலும் 3 பேர் சென்றுள்ளனர். இதையடுத்து கொள்ளையனிடம் இருந்து 20 ஆயிரம் ரொக்கப்பணம், ஒரு பவுன் தோடு, 50 கிராம் எடையுள்ள 2 வெள்ளிக்காசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவை வழக்கறிஞர் பாரி வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டவை ஆகும். அதேபோல் சரோஜாவிடம் திருடிய 4 பவுன் தாலி சரடையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ஜோசப் ஸ்டீபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் கொள்ளை சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED உளுந்தூர்பேட்டை போட்டோகிராபர் கொலை...