×

பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்கும் பணி தீவிரம்

விருத்தாசலம், நவ. 8: விருத்தாசலம் நகரில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் அனுமதியின்றி நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் சுற்றி திரிந்த பன்றிகளை பிடிக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் பாலு உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் குமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் மற்றும் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட பன்றிகள் பிடிக்கும் குழுவினர், நகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனை பின்புறம், ராமச்சந்திரன் பேட்டை, செல்லியம்மன் கோயில், பெரியார் நகர், கிருஷ்ணா நகர், நுகர்பொருள் வாணிப கிடங்கு பின்புறம், முல்லை நகர் மற்றும் செல்வராஜ் நகர் உள்ளிட்ட பல பகுதி களில் சுற்றித்திரிந்த 25க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்தனர். தொடர்ந்து பிடிக்கப்பட்ட பன்றிகளை கருவேப்பிலங்குறிச்சி காப்பு காட்டில் சென்று விடுவித்தனர். மேலும் தற்போது மழைக்காலம் என்பதால், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கும் பொருட்டு பன்றிகள் பிடிக்கப்பட்டு வருகின்றன.

அதனால் பன்றிகளை வளர்க்கும் நபர்கள், கூண்டு வைத்து பாதுகாப்பாக, தங்கள் சொந்த இடங்களிலேயே வளர்க்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பன்றிகளை திரிய விடக்கூடாது. மீறினால் பன்றிகளை பிடித்து செல்வதோடு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பன்றிகளை பிடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என ஆணையாளர் பாலு தெரிவித்தார். அப்போது ஆய்வாளர் சாம்கலோனல், மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்ச்செல்வன், முத்தமிழன் உள்ளிட்ட நகராட்சி ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags : places ,
× RELATED நெற்பயிரில் குலநோய் தாக்குதல் தீவிரம்