புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு சாராயம் கடத்திய வாலிபர் கைது

கடலூர், நவ. 8: புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபரை கடலூர் முதுநகர் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சாராயம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிகளுக்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தல் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடலூர்-புதுச்சேரி எல்லைப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் மாவட்ட எஸ்பி  அபிநவ் உத்தரவின் பேரில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட காவல் சரக பகுதி போலீசார் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடலூர் முதுநகர் காவல் சரகத்தில் அன்னவெளிப்பகுதியில் தலைமைக்காவலர் மவுலீஸ்வரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். சோதனையின் போது பைக்கில் 3 மூட்டைகளில் 110 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் புதுச்சேரி குருவிநத்தம் பகுதியில் இருந்து தமிழக பகுதிக்கு கொண்டு செல்வதற்காக சாராயம் கடத்தி வந்ததும், பிடிபட்ட வாலிபர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (19) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து வாலிபரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்று சாராய கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்ட மற்றொரு சாராய வியாபாரியான புதுச்சேரியை சேர்ந்த சிவமணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Puducherry ,Tamil Nadu ,
× RELATED அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற வாலிபர் கைது