ஓட்டல், விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் அதிரடி கட்டுப்பாடு

சிதம்பரம், நவ. 8: தங்கும் விடுதியில் வந்து தங்கும் அனைவரிடமும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகலை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும் என சிதம்பரம் டி.எஸ்.பி கார்த்தி
கேயன் அறிவுறுத்தினார். அயோத்தி தொடர்பான முக்கிய தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுவதிலும் காவல் துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிதம்பரம் உட்கோட்ட போலீஸ் சார்பில் நேற்று ஓட்டல், லாட்ஜ் மற்றும் அச்சக உரிமையாளர்கள், மேலாளர்கள் பங்கேற்ற கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், அயோத்தி தொடர்பான தீர்ப்பு வெளியாக இருப்பதால் ஒரு மாத காலத்துக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பேனர் அச்சடிக்கும் நிறுவனங்கள் மற்றும் அச்சகங்களில் மதம் மற்றும் சாதி தொடர்பான வாசகங்கள் எதுவும் அச்சடிக்கக் கூடாது. அப்படி அச்சடித்தால் அந்த அச்சகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கும் விடுதிகளில் வந்து தங்கும் நபரின் விவரங்களை பதிவேட்டில் முறையே பூர்த்தி செய்து அதனை தினமும் விடுதி மேலாளர் தவறாது காவல்நிலையத்துக்கு எடுத்து வரவேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களை தங்க அனுமதிக்கக் கூடாது. அப்படி சந்தேக நபர் என்று யாரேனையும் நினைத்தால், உடனடியாக அவர்கள் குறித்து காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதியில் வந்து தங்கும் அனைவரிடமும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகலை கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். இந்த ஒரு மாத காலத்துக்கு அச்சக உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் இதனை கடைபிடிக்க வேண்டுமென கூறினார். கூட்டத்தில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன், 50க்கும் மேற்பட்ட அச்சகம் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Hotel ,Police Action ,Hotel Owners ,
× RELATED தனியார் தங்கும் விடுதியில் பெண்கள் குளிப்பதை படம் பிடித்தவர் கைது