இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம்

சேத்தியாத்தோப்பு, நவ. 8: சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் கிழக்கு தெருவில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். இக்கட்டிடத்தில் தற்போது சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு கட்டிடம் சிதிலமடைந்துள்ள நிலையில் உள்ளது. இந்த சேதமடைந்த கட்டிடத்தால் தான் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்றும் உணவருந்தியும் வருகின்றனர். அங்கன்வாடியில் பொறுப்பாளர், சமையல் உதவியாளர் என இருவர் பணியில் உள்ளனர். இவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேலே போடப்பட்டுள்ள ஆஸ்பெஸ்டாஸ் சிமெண்ட் ஓடுகளில் ஓட்டை விழுந்து மழைநீர் உள்ளே புகுவதால் குழந்தைகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கழிப்பிடமும், மினி வாட்டர் டேங்க்கும் பயன்பாடின்றி பழுதடைந்து கிடக்கிறது. இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் பலமுறை கீரப்பாளையம் ஒன்றிய அங்கன்வாடி மைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை பார்வையிட்டு இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : center building ,ruins ,
× RELATED சிவகாசி நகராட்சியில் உள்ள ஆரம்ப...