×

மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் மண் பரிசோதனை நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

கடலூர், நவ. 8: தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில், நடப்பு நிதியாண்டில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் மண்வள அட்டைப்படி பயிருக்கு விவசாயிகள் உரமிடுதல் குறித்து முன்னோடி கிராமங்கள் தேர்வு செய்து செயல் விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு, பயிர் வாரியாக அனைத்து புல எண்களிலும் மண் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்து மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் செயல்விளக்கம் அமைக்கப்பட்டுள்ள 13 மாதிரி கிராமங்களில் 1,247 மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அட்சரேகை, தீர்க்க ரேகை உட்பட அடிப்படை புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு ஆய்வு செய்து மண்வள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளின் கருத்து அறிவதற்காக மத்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகம் சார்பில் காண்காணிப்புக் குழு பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களுருவில் செயல்படும் மத்திய மண்வகையிடு மற்றும் நில பயன்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பங்கஜ் லகாட்டே தலைமையில், உதவி இயக்குநர் சிவக்குமார் மற்றும் மத்திய வேளாண் அமைச்சக உர ஆய்வாளர் முனைவர் பிரமோத்மாகுர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடலூர் மண் பரிசோதனை நிலையத்தில்  ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது விவசாயிகளின் நிலத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ஆய்வுக்கு ஏற்ப தயாரித்தல், குறியீட்டு எண் வழங்குதல், களர் அமிலத்தன்மை ஆய்வு, உப்பின் நிலை அறிதல், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆய்வு, இரும்பு, தாமிரம், துத்தநாகம் மற்றும் மாங்கனிசு உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து ஆய்வு செய்தல் குறித்து நேரில் பார்வையிட்டனர். ஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) ரமேஷ், கடலூர் வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் மற்றும் கடலூர் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் ஷோபனா, அகிலா, சூரியலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இக்குழுவினர், மாதிரி கிராமங்களில் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்துவதற்காக அண்ணாகிராமம் வட்டாரம் சித்தரசூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் கஞ்சமநாதன்பேட்டை, விருத்தாசலம் வட்டாரம் கவணை மற்றும் புவனகிரி வட்டாரம் சீயப்பாடி ஆகிய கிராமங்களுக்கு சென்றனர்.

Tags : Soil Card ,
× RELATED 50% மானியத்தில் உளுந்து விதை, உயிர் உரங்கள்