×

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தலைமை செயலர் திடீர் ஆய்வு

புதுச்சேரி, நவ. 8: புதுச்சேரி  தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தலைமை செயலர் அஸ்வனி  குமார் திடீர் ஆய்வு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி  தட்டாஞ்சாவடியில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு  புதுச்சேரி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட சுற்றுவட்டார  பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல், உளுந்து, எள், மணிலா உள்ளிட்ட வேளாண்  விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தற்போது, மத்திய  அரசின் ஈ-நாம் திட்டத்தின்படி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு  வருகின்றன. விவசாயிகள் விளைபொருட்களுக்கு எடை, விலை, பணப் பட்டுவாடா  அனைத்தும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதனால் இடைத்தரகர்  முறை ஒழிக்கப்பட்டு நேரடியாக விவசாயிகள் வங்கிக் கணக்கில்  விளைபொருட்களுக்கு உண்டான தொகை உடனடியாக செலுத்துவதற்கான வாய்ப்பு உருவாகி  உள்ளது.
இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் செயல்பாடுகள்  குறித்து தலைமை செயலர் அஸ்வனி குமார் நேற்று  திடீர் ஆய்வு  மேற்கொண்டார். அப்போது, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விளைபொருட்கள்  இருப்பு, கொள்முதல் விலை, பணப்பட்டுவாடா, விவசாயிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட  விவரங்கள் அனைத்தையும் கணினியில் பார்வையிட்டார். பின்னர் பல்வேறு  பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.  அப்போது, குடிநீர், கழிவறை, இரவுநேர தங்குமிடம், விளைபொருட்களை மழை,  வெயிலில் இருந்து பாதுகாக்க கூடுதல் கிடங்குகள் அமைத்து தர வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலிப்பதாக தலைமை செயலர் அஸ்வனி  குமார் தெரிவித்தார்.

Tags : chief secretary ,
× RELATED உரிய மரியாதை தராமல்...