×

புதுவை அரியாங்குப்பத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை ஏன்?

புதுச்சேரி, நவ. 8: புதுச்சேரி அரியாங்குப்பத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி கொல்லப்பட்டது ஏன் என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. புதுச்சேரி அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்தவர் ஜிம் பாண்டியன் (26). இவர் மீது அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், 4 அடிதடி வழக்குகளும் உள்ளன. இந்நிலையில் பாண்டியன் அப்பகுதியில் உள்ள வாலிபால் மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை அமர்ந்திருந்தார். அப்போது, அங்கு கத்தி, அரிவாள், வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரி வெட்டியும் கொலை செய்தனர். இது குறித்து அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற சேது தலைமையிலான கும்பல் பாண்டியனை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் என்ற சேது, கிருஷ்ணா, சுரேந்தர், அஸ்வின், பிரசாந்த், அருண், நரேஷ் ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடினர். இதில் சுரேந்தர் உள்ளிட்ட 4 பேர் கும்பல் போலீசாரிடம் சிக்கியதாக தெரிகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட பாண்டியன், அந்த ஏரியாவில் தான் பெரிய ரவுடி போல கருதிக்கொண்டு, அங்குள்ள சேது தரப்பினரை மிரட்டுவதும், தாக்கி வருவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு சேதுவை பாண்டியன் கட்டிப்போட்டு அடித்துள்ளார். அதை செல்போனில் வீடியோ எடுத்து பரப்பியுள்ளார். இது சேதுவுக்கு பெருத்த அவமானமாக இருந்தது. அதன்பிறகு, ஒருசில வழக்குகளில் சேது மற்றும் கூட்டாளிகள் சிறைக்கு சென்று வெளியே வந்தனர். இதில் பெரிய ரவுடிகளுடன் தொடர்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கடந்த தீபாவளி நேரத்தில் சேதுவும், கூட்டாளிகளும் மது போதையில் பாண்டியனை தடுத்து அவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் தனது கூட்டாளிகளுடன் சேதுவின் வீட்டுக்கு சென்று அவரை தேடியுள்ளார். இதையறிந்த சேது, பாண்டியன் தன்னை தீர்த்துக் கட்டுவதற்கு முன்பாக அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். இதற்காக ரவுடி அஸ்வின் உதவியை நாடியுள்ளார். 3 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை சேதுவிடம் கொடுத்துள்ளார். பாண்டியனை கொல்வதற்கு தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை தனியாக வாலிபால் மைதானத்தில் அமர்ந்திருந்த பாண்டியனை கூட்டாளிகளுடன் சேர்ந்து சேது கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.

Tags : Rowdy ,
× RELATED ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் கைது