50 சதவீத இடங்களை பெற கவர்னர், முதல்வருக்கு மனு

புதுச்சேரி, நவ. 8:   புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் நாராயணசாமி, பொருளாளர் விசிசி.நாகராஜன் ஆகியோர் கவர்னர், முதல்வர், தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற அடிப்படையில் ஜிப்மர் எய்ம்ஸ் போன்ற மருத்துவ கல்லூரிகளும், நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. 2020 ஆண்டு முதல் சட்டத்தை அமல்படுத்தி மாநில மாணவர்களுக்கு அரசு இடஒதுக்கீடாக 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன் அடிப்படையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு பெற்றுத்தர வேண்டும். முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வருகிற ஜனவரி 5ம் தேதி  அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 50 சதவீத இடங்களை கவர்னர், முதல்வர், தலைமை செயலர் ஆகியோர் இணைந்து செயல்பட்டு பெற்று தரவேண்டும். ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 2020 ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையில் புதுவை மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள் கிடைக்குமா? கிடைக்காதா? என்று மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: