தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை கட்டிடம்

கண்டமங்கலம், நவ. 8:      விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை கட்டிடத்தினை கலெக்டர் சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை கட்டிடத்தை கலெக்டர் சுப்ரமணியன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிராம சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிக்கான ஆணையை வழங்கி கலெக்டர் சுப்பிரமணியன் பேசும்போது, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளித்தென்னல் ஊராட்சியில் தமிழ்நாடு கிராம வங்கியின் புதிய கிளை கட்டிடம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று கிராமப்புற பகுதிகளில் புதிய வங்கி கிளைகளை திறப்பதன் மூலம், கிராமப்புற விவசாயிகள், கிராமப்புற மகளிர், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறுகுறு தொழில் முனைவோர் எளிமையான முறையில் கடன் பெற்று பயனடைந்து கொள்ளலாம்.

கிராமப்புற மக்களும், விவசாயிகளும் இது போன்ற அரசு வங்கிகளில் தங்களது சேமிப்பு கணக்கினை தொடங்கி, தங்களது சேமிப்பினை முதலீடு செய்து, தங்களது தேவைக்கேற்ப கடன்உதவி பெற்று பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு தாங்கள் பெற்ற கடனுக்கான தவணை தொகையினை சரியான முறையில் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்த வங்கி குறுகிய காலத்திலே ரூ.3 கோடிக்கு மேல் வியாபாரம் செய்துள்ளது. இந்த வங்கி இன்னும் சிறப்பாக செயல்பட்டு வியாபாரம் செய்து இந்த பகுதி மக்களுக்கு முழுமையான வங்கி சேவையினை வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (ஊராட்சி) ஜோதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், வட்டார வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், வங்கி கிளை மேலாளர் சுஜாதா, காசாளர் லட்சுமி நாராயணன் மற்றும் வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: