×

மின்னணு மண்பாண்ட தயாரிப்பு இயந்திரங்கள்


கண்டமங்கலம், நவ. 8:    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பள்ளித்தென்னல் ஊராட்சியில் காதி மற்றும் கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் கும்பகர் சக்திகரன் திட்டத்தின் கீழ் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.32 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் மின்னணு மண்பாண்ட தயாரிப்பு இயந்திரங்களை கலெக்டர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் காதி மற்றும் கதர் கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் கும்பகர் சக்திகரன் திட்டத்தின் கீழ் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மின்னணு மண்பாண்ட தயாரிப்பு இயந்திரங்களை கலெக்டர் வழங்கி பேசியதாவது: இதற்குமுன் மண்பாண்ட தொழிலாளர்கள் கைகளால் மண்பாண்ட பொருட்களை செய்து வந்தார்கள். தற்போது இந்த மின்னணு மண்பாண்ட தயாரிப்பு இயந்திரத்தினால் மண்பாண்டங்களை செய்யும்போது தொழிலாளர்களுக்கு உடல் அலுப்பு இல்லாமலும் அதிகப்படியான எண்ணிக்கையில் உற்பத்தி செய்வதற்கும் இந்த இயந்திரம் பயனுள்ளதாக இருக்கும். இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் தங்களுடைய வருமானத்தினை பெருக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். இந்த இயந்திரத்தை வழங்குவதற்கு முன்பு இதன் செயல் விளக்க பயன்பாட்டினை ஒத்திகை செய்து காட்டியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இங்குள்ள மண்பாண்ட கலைஞர்கள் அனைவரும் ஒரு குழு அமைத்துக் கொள்ள வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலமாக ஆண்டுதோறும் அவர்களுடைய சிறு தொழில்கள் ஆரம்பிப்பதற்கும் அந்த தொழில்களை பெருக்குவதற்கும் வங்கிகள் மூலம் அரசு நிதியுதவி செய்து வருகிறது. இதுபோன்ற சுய உதவிக்குழுக்களை மண்பாண்ட தொழிலாளர்களாகிய நீங்களும் ஆரம்பிக்கலாம். இந்த சுய உதவிக்குழுக்களின் நோக்கம் குறைந்த வட்டியில் வங்கிகளில் கடன்களை பெற்று, உங்களது தொழில்களை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். விழுப்புரம் மாவட்டத்தில் அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த கிராமத்தில்
அரசு நிதி உதவியுடன் ஒரு மண்பாண்ட தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்க மாவட்ட நிர்வாக சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விக்கிரவாண்டி தாலுகா அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் அரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில கதர் மற்றும் கைவினைபொருள் வாரியம் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இந்த பயிற்சி மையம் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்களின் அழிவுக்கு காரணம் அலுமினியப் பொருட்கள் மற்;றும் எவர்சில்வர் பாத்திரங்கள் தான். தற்போது மீண்டும் மண்பாண்ட பொருட்களை பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பான வாழ்க்கை அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
 நிகழ்ச்சியில் மாநில கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் நல்லமுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன், உதவி இயக்குநர் (ஊராட்சி) ஜோதி, கடலூர் சர்வோதய சங்க தலைவர் கணேசன், கடலூர் சர்வோதய சங்க செயலாளர் சந்திரசேகர், கதர் மற்றும் கிராம தொழில்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்