அமைச்சர் தலைமையில் ஆலோசனை

புதுச்சேரி, நவ. 8:  புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகள் நடத்துவது தொடர்பாக அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.   புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகள் கடந்த 1988ம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு பிறகு, இந்த போட்டிகள் நடைபெறவில்லை. எனவே, கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தலின் பேரில், உயர்க்கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குநர் ஆகியோர் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் 2019-20ம் கல்வி ஆண்டு முதல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் கலாசார போட்டி நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டையில் உள்ள உயர்க்கல்வித்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். உயர்க்கல்வித்துறை இயக்குநர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு பணி அலுவலர் ரமேஷ், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய இயக்குநர் அறவாழி இருசப்பன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் சுப்ரமணி, கதிர்காமம் இந்திரா காந்தி கல்லூரி முதல்வர் குமரன், அன்னை தெரசா கல்லூரி புலமுதன்மையர் டாக்டர் ஜெயந்திர, தாகூர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் இளங்கோ உட்பட அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களும் கலந்து கொண்டனர்.   இக்கூட்டத்தில் விளையாட்டு மற்றும் கலாசார போட்டிகளை வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் நடத்துவது என்றும், எந்தெந்த வகையான போட்டிகள் நடத்துவது என்றும், அனைத்து அரசு மற்றும் சொசைட்டி கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் பங்கேற்கும் வகையில் போட்டிகளை நடத்துவது என்றும் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: