×

பருவமழை துவங்கிய நிலையில் குடிமராமத்து பணிக்கு டெண்டர்

மரக்காணம், நவ. 8: பருவமழை பெய்துவரும் நிலையில் மராமத்து பணிகளை மேற்கொள்ள மரக்காணம் பேரூராட்சி இன்று டெண்டர் விடப்படும் என அறிவித்துள்ளது. பேரூராட்சியின் காலதாமதமான செயல்பாட்டால் அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே 6 மாதத்திற்கு பின் பணிகளை துவங்க வேண்டும் என திமுகவினரும், பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.மரக்காணம் பேரூராட்சியில் அழகன்குப்பம், கைப்பாணி, நாரவாக்கம், மண்டவாய்,  கழிக்குப்பம், தாழங்காடு, கோணவாயன்குப்பம் உள்பட 18 வார்டுகள் உள்ளன.  இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இவர்களில்  பெரும்பாலானோர் விவசாயிகள் ஆவர். இப்பகுதி விழுப்புரம் மாவட்டத்தின் கடைசி  எல்லையாக உள்ளது. இதனால் இப்பகுதியில் பொது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை  வழங்கக்கூடிய எந்தவொரு தொழிற்சாலைகளும் இல்லை.

இதன்காரணமாக இங்குள்ளவர்கள்  விவசாய தொழிலையே அதிகளவில் நம்பி உள்ளனர். இப்பகுதியில் கடந்த 20  ஆண்டுகளுக்குமுன் 100க்கும் மேற்பட்ட குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட முக்கிய  நீர்பிடிப்பு பகுதிகள் இருந்தது. இந்த நீர்நிலைகளை நம்பியே இங்குள்ள  அனைத்து விவசாயிகளும் காலந்தொட்டு முப்போக சாகுபடி செய்துவந்தனர்.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பருவகாலமாற்றம், பருவ மழை பொய்த்துப்போதல்  உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.  அதாவது கடந்த 20 ஆண்டுக்குமுன் இங்கு நிலத்தடி நீர்மட்டம் 20 அடியில்  இருந்தது. ஆனால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் 100 அடிக்கும் கீழாக  குறைந்துவிட்டது. இதற்கு குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்  நிலைகளை அரசு முறையாக பராமரிக்காததுதான் முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக  குறைந்துவிட்டதால் இப்பகுதியில் விவசாயமும் அழிந்துவருகிறது. குடிநீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. இதனால் தற்போது இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க குடிமராமத்து செய்ய அரசு சார்பில் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பல இடங்களில்  இப்பணிகள் ஓரளவு நடந்துவருகிறது.

இதுபோல் மரக்காணம் பேரூராட்சியிலும் 10க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை குடிமராமத்து செய்ய பேரூராட்சி நிர்வாகம்  சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இந்த நீர் நிலைகளை  குடிமராமத்துசெய்வதற்கான டெண்டர் விட கடந்த மூன்று மாதத்திற்குமுன் முறையாக  ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர்களுக்கும்,  அரசியல்பிரமுகர்களுக்கும் ஏற்பட்ட கமிஷன் பிரச்னையால் எதிர்பாராதவிதமாக  டெண்டர் நிறுத்தப்பட்டது. இது போல் மூன்று முறை டெண்டர் விடும் பணி  நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் ெதரிவித்தனர்.

அரசியல்  பிரமுகர்
களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னையால் இதுவரையில் இப்பகுதியில்  எந்தவொரு குடிமராமத்து பணியும் நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது வடகிழக்கு  பருவ மழை துவங்கி சில நாட்களாக கன மழையும் பெய்துவருகிறது. இதனால்  இப்பகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஓரளவு தண்ணீர்  தேங்கியுள்ளது. இதுபோல் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழையால் நீர் நிலைகள்  முற்றிலும் நிரம்பிவிட்டால் இதனைத்தொடர்ந்து 6 மாதத்திற்கு பிறகுதான்  குளங்களில் நீர் வடியும் சூழ்நிலையுள்ளது. இந்நிலையில்  இப்பேரூராட்சிக்குட்பட்ட 10 குளங்களை ரூ.19.45 லட்சம் செலவில் மேம்படுத்துதல் மற்றும் தூர்வாரும் பணிக்காக  8ம்தேதி (இன்று) மாலை 3  மணிக்கு டெண்டர் விடப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக  அறிவிப்பு செய்துள்ளனர். இதனைப்பார்த்த தி.மு.கவினர் தற்போது மழைக்காலம்  துவங்கி கன மழைபெய்து வருவதால் குளங்கள், குட்டைகள் பாதி அளவு தண்ணீர்  தேங்கியுள்ளது. இந்த சூழலில் எப்படி குளங்களை தூர்வாரமுடியும். இது போல்  பணி செய்தால் அதில் முறைகேடுதான் நடக்கும். எனவே 6 மாதத்திற்கு பிறகு  கோடைகாலம் துவங்கிய பிறகுதான் குளங்களை தூர்வாரவேண்டும். மேலும் கோடைகாலத்தில் பணிசெய்யாமல் தற்போது செய்தால் தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்  நடத்தப்படும் என்று பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை  மனுகொடுத்துள்ளனர். எனவே இப்போது குடிமராமத்து பணிகளை செய்தால் அரசு நிதி வீணாகும். ஆகையால் 6 மாதத்திற்கு பின் மராமத்து பணிகளை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா ஊரடங்கால் பாராமுகம் கோடையில்...