×

விவசாயிகள் போராட்டம் எதிரொலி கோமுகி அணை இன்று திறப்பு

சின்னசேலம், நவ. 8: விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக கோமுகி அணையில் இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் அமைச்சர் மற்றும் கலெக்டர் பங்கேற்க உள்ளனர். கோமுகி அணையில் இருந்து உற்பத்தியாகும் ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார்  5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சம்பா பருவ சாகுபடிக்காக நாற்று விடுதல் உள்ளிட்ட நடவு பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதிக்குள் கோமுகி அணையின் முதன்மை கால்வாயில் இருந்து நீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அணை நிரம்பி 7 நாட்கள் ஆகியும் இன்னும் அணை திறக்கவில்லை. அதைப்போல கோமுகி அணை நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அக்டோபர் 30ம் தேதி அணையை திறக்க தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கோமுகி அணையை திறக்க அரசு முன்வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கோமுகி அணையை பாசனத்திற்கு திறக்காததை கண்டித்து தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கஜேந்திரன் தலைமையில் பாஜவை சேர்ந்த நகர தலைவர் ராமு முன்னிலையில் பாசன விவசாயிகள் திரண்டு வந்து கோமுகி அணையின் முதன்மை பாசன கால்வாய் முன்பு போராட்டம் செய்தனர். இதையடுத்து 8ம் தேதி அணையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து இன்று (8ந்தேதி) காலை 8 மணியளவில் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் தலைமையில்  கோமுகி அணை திறக்கப்பட உள்ளது. அமைச்சர் சண்முகம் அணையை பாசனத்திற்கு திறந்து வைக்கிறார். கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் காந்த், சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொள்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED சீசன் தொடங்கிய நிலையில் மாங்காய்களில் நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை