×

விழுப்புரம் மாவட்டத்தில் கனரக தொழிற்சாலை கொண்டு வர வேண்டும்

விழுப்புரம்,  நவ. 8: குறு, சிறு தொழில்களுக்காக அமைக்கப்பட்ட லகு உத்யோக் பாரதி  அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் நேற்று விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களின் வரையறையை அறிவிக்க உள்ளது. தற்போது இயந்திரங்களின் மூலதனத்தை  பொறுத்து ரூ.25 லட்சம் வரையில் மூலதனம் உள்ள தொழில்கள்  குறுந்தொழில்களாகவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள தொழில்கள்  சிறுதொழிலாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை நடுத்தர தொழில்கள் எனவும்  வரையறை செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வரையறையை மாற்ற முயற்சிகள் நடந்து  வருகிறது. அதில் ரூ.275 கோடி வரையுள்ள தொழில்கள் இந்த சலுகைகளை பெற  தகுதியானவை என மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.தற்போதைய மூலதன  நடைமுறையே தொடர வேண்டும் எனவும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரூ.50 லட்சம்  வரை இயந்திர தளவாடங்கள் மூலதனம் மற்றும் தளவாட மூலதனம் உள்ள தொழில்  குறுந்தொழில் எனவும், ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை உள்ள தொழில்கள்  சிறு தொழில்கள் எனவும் அறிவிக்கப்பட வேண்டும். உற்பத்தி சார்ந்த சேவை  நிறுவனங்கள் மட்டும் இந்த வரையறையில் சேர்க்கப்பட வேண்டும். நடுத்தர  தொழில்களை இந்த வரையறையில் இருந்து நீக்க வேண்டும்.

மத்திய அரசின்  கொள்கைப்படி பழைய முறையே தொடர வேண்டும். விவசாயத்திற்கு எந்த வட்டி  விகிதத்தில் கடன் அளிக்கப்படுகிறதோ அதே வட்டி விகிதத்தில் சிறு  தொழில்களுக்கும் கடன்கள் வழங்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தின்  தலைநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிற்குள்ளும், தாலுகா தலைநகரத்தில்  இருந்து 10 கி.மீ. தொலைவிற்குள்ளும் மும்முனை மின்சாரத்துடன் தொழிற்சாலைகள்  தொடங்க அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதியளிக்கும்பட்சத்தில்  விழுப்புரம் மாவட்டம் தொழில்துறையில் முன்னேறும்.  அதுபோல் இங்கு பெரிய கனரக  தொழிற்சாலை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் தொழில் வளரவும் ஏதுவாக  இருக்கும். இவ்வாறு அவர்
 கூறினார். மாநில செயற்குழு உறுப்பினர்  சிவ.தியாகராஜன், மாவட்ட தலைவர் ராஜிலு, செயலாளர் சண்முகம், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ராஜ்நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : factory ,Villupuram district ,
× RELATED தனியார் தொழிற்சாலையில் மயங்கி விழுந்து ஊழியர் சாவு