ஆதி திருவரங்கம் பெருமாள் கோயிலுக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை

ரிஷிவந்தியம், நவ. 8: ரிஷிவந்தியம் அருகே ஆதி திருவரங்கத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து ரங்கநாத பெருமாளை தரிசிக்கின்றனர்.இக்கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு இடைவெளி இல்லாமல் கோயில் நடைகள் திறக்கப்பட்டிருக்கும். இதனால் பக்தர்கள் எல்லா நேரங்களிலும் வருகின்றனர். விழுப்புரம் - திருக்கோவிலூர் - மணலூர்பேட்டை - ரிஷிவந்தியம் - தியாகதுருகம் - திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களிலிருந்து கள்ளிப்பாடி வழியாக ஆதி திருவரங்கம் கோயிலுக்கு வரவேண்டும்.ஆனால் கள்ளிப்பாடி அருகில் சாலையை ஒட்டி அரசு டாஸ்மாக் கடை உள்ளதால் மதுபிரியர்கள் குடித்துவிட்டு சாலையில் கூட்டம் கூட்டமாக போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கின்றனர்.மேலும் அவ்வழியாக கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழி விடாமல் தகராறு செய்கின்றனர். இதனால் பெண்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: