×

கள்ளக்குறிச்சியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு டீலக்ஸ் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல்

கள்ளக்குறிச்சி, நவ. 8:  கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சார் ஆட்சியர் காந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசுகையில் கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைகள் அனைத்தும் சுடுகாட்டில் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கோட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு மற்றும் தனியார் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்பிடிப்பு இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. எனவே அதனை தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் டீலக்ஸ் என்ற பெயரில் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தில் கூடுதலாக ரூ.25 கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

இதேபோல் மற்ற நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது சார் ஆட்சியர் காந்த் கூறுகையில், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதில் தனிவட்டாட்சியர்கள் வெங்கடேசன், பாண்டியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு, உதவி மின்பொறியாளர் தமிழரசன், நகராட்சி இளநிலை உதவியாளர் செந்தில்குமார், மண்டல துணை வட்டாட்சியர் பரந்தாமன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மனோஜ்முனியன், போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர்கள் மஞ்சுநாதன், விஸ்வநாதன் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kallakurichi ,Chennai ,
× RELATED சென்னையில் அரசு ஊழியர்கள் பணிக்குச்...