×

அயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு நெல்லை காவல் நிலையங்களில் ஆலோசனை கூட்டம்

நெல்லை, நவ. 8: சர்ச்சைக்குரிய அயோத்தி நில பிரச்னை தொடர்பான வழக்கில்  உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அச்சகத்தினர், பல்வேறு அமைப்பினர் என ஏராளமானோர் பங்கேற்றனர். சர்ச்சைக்குரிய அயோத்தி நில பிரச்னை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் குறிப்பாக இன்னும் பத்து நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி ஏதேனும் அசம்பா விதங்கள் நடைபெறாமல் தடுக்கும்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் டிஜிபி திரிபாதி உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று நெல்லை மாவட்டத்தில் எந்தெந்த காவல் நிலைய எல்கையில் பிரச்னை ஏற்பட்டதோ அப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள அனைத்து அமைப்புகள், கட்சிகளை சேர்ந்தவர்களை அழைத்துப் பேசி போலீசாரின் பாதுகாப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தவும்  உத்தரவிடப்பட்டது.

 இதையடுத்து நேற்று முன்தினம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் நடந்த  ஆலோசனை கூட்டங்களுக்குபாளை உதவி கமிஷனர் பெரியசாமி,  இன்ஸ்பெக்டர் ஜெயபால் பர்னபாஸ்ஆகியோர்  தலைமை வகித்தனர். நேற்று முன்தினம் இரவும், நேற்று இரவும் நடந்த கூட்டங்களில் இஸ்லாமிய அமைப்புகள், இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதே போல் அச்சக அதிபர்களும் தங்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர். இதில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து பாராட்டியோ? அல்லது கண்டித்தோ? அச்சடிக்க கூடாது. எனவும் பெட்ரோல் பங்கில் வாகனங்களை தவிர தனியாக பிளாஸ்டிக் கேன்கள் உள்ளிட்ட பொருட்களில் பெட்ரோல், டீசலை ஊற்றிக் கொடுக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வலியுறுத்தப்பட்டன.  இதே போல் நெல்லை டவுன் காவல் நிலையத்தில்  நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். இதில் தமுமுக, தவ்ஹீத் ஜமாத், முஸ்லிம் லீக், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ மற்றும் இஸ்லாமிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். எஸ்ஐ விமல் நன்றி கூறினார்.

இதே போன்று பாளை பெருமாள்புரம், ஐகிரவுண்ட், பாளை, மேலப்பாளையம், நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை, தச்சநல்லூர் என மாநகர எல்கையில் உள்ள 8 காவல் நிலையங்களிலும், நெல்லை மாவட்டத்திலுள்ள 60 காவல் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.  இதில் பங்கேற்ற அச்சகத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags : Supreme Court ,Ayodhya ,
× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து...