×

நகராட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்களில் முதல் நிலை பரிசோதனை

சங்கரன்கோவில், நவ. 8: நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழைய வேட்பாளர் சீட்டுகளை அகற்றி முதல்நிலை பரிசோதனை நடந்தது. இதையொட்டி சங்கரன்கோவில் நகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு, ஓரிரு நாட்களில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, அம்பை, வி.கே.புரம் ஆகிய 7 நகராட்சிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும் மின்னணு இயந்திரங்கள், கடந்த அக்.3ம் தேதி சங்கரன்கோவில் நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது. கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இருந்து 2151 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யத்கிர் மாவட்டத்தில் இருந்து 1135 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 2 கன்டெய்னர் லாரிகளில் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தன. இதில் 7 நகராட்சிகளுக்கான 1800 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 900 கட்டுப்பாட்டு கருவிகள் சங்கரன்கோவில் நகராட்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 351 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 215 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் நெல்லை மாநகராட்சிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள வேட்பாளர்கள் சீட்டுகளை அகற்றி பரிசோதனை செய்யும் பணி, நேற்று நடந்தது. இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து 7 பொறியாளர்கள் சங்கரன்கோவில் நகராட்சிக்கு வந்தனர். நகராட்சி ஆணையர் சந்தானம் தலைமையில் நகராட்சி மேலாளர் லெட்சுமணன் மேற்பார்வையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது. நகராட்சி பணியாளர்களுடன், அம்பை நகராட்சி பணியாளர்களும் இணைந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் இருந்த சீல்களையும், வேட்பாளர்கள் சீட்டுகளையும் அகற்றினர். பெல் நிறுவன பொறியாளர்கள் ஒவ்வொரு இயந்திரத்தையும் பரிசோதனை செய்தனர். இயந்திரத்தில் உள்ள பட்டன்களையும், அதில் உள்ள எல்இடி பொருத்தப்பட்ட பல்புகளையும் பரிசோதித்தனர். இந்த முதல்நிலை பரிசோதனை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.

Tags : level testing ,elections ,
× RELATED ஊரடங்கு காரணமாக 60 நாள் கதவடைப்பால்...