×

போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன அம்பை - பாபநாசம் சாலையில் கால்நடைகளால் விபத்து அபாயம்

அம்பை, நவ. 8: அம்பை - பாபநாசம் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் ஆடு, மாடுகளால் விபத்து அபாயம் காணப்படுகிறது. எனவே கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர். அம்பை பகுதியில் தெரு சாலைகளையும், பிரதான ரோடுகளையும் ஆடு, மாடு மற்றும் நாய்கள் ஆக்கிரமித்து ஆங்காங்கே முகாமிட்டு கொள்கின்றன. மாடு வளர்ப்போர் காலையில் மாட்டை அவிழ்த்துவிட்டு மாலையில்தான் பிடித்துச் செல்கின்றனர். இதனால் பெரும்பாலான நேரங்களில் அவை, சாலையையே புகலிடமாக்கி கொள்கின்றன. சில நேரங்களில் மாடுகள் சண்டையிட்டு சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன.

குறிப்பாக அம்பை -பாபநாசம் பிரதான சாலை, கிருஷ்ணன் கோயில் முதல் அகஸ்தியர் கோயில், சந்தை பஜார், திலகர் மெயின் ரோடு, ரயில்வே கேட் - தென்காசி சாலை, ரயில்வே நியூ காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் வாரச்சந்தை, பஸ் நிறுத்தம் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதியில் தினமும் ஏராளமான மாடுகள் சாலையை ஆக்கிரமிக்கின்றன. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் மையப்பகுதியில் முகாமிடுவதால், வாகனங்களில் வருவோர் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே விபரீதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறாக திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Tags : Livestock accident ,road ,Amban - Papanasam ,
× RELATED ‘எங்கு பார்த்தாலும் குண்டும்,...