ஸ்பிக்நகர் அருகே குடியிருப்பு பகுதியில் தடுப்புசுவர் இல்லாத கால்வாய் கிணறால் விபத்து அபாயம்

ஸ்பிக்ந்கர், நவ.8:ஸ்பிக்நகரை அடுத்த தவசிபெருமாள் சாலையில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாசன கால்வாயில் தடுப்புசுவர் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளதால் உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோரம்பள்ளம் குளத்திலிருந்து அத்திமரப்பட்டி விவசாய நிலங்களுக்கு கால்வாயின் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு சென்றது போக மீதமுள்ள தண்ணீர் பாரதிநகர், தவசிபெருமாள் சாலை, முள்ளக்காடு வழியாக கால்வாய் மூலம் கடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் தவசிபெருமாள் சாலையில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் எந்தவித தடுப்பு சுவரும் கட்டப்படாமல் ஆபத்தான நிலையில் கால்வாய் செல்கிறது. கடந்த வருடத்தில் விளையாட சென்ற சிறுவன் இந்த கால்வாயில் விழுந்து இறந்தான். அதன்பின்னரும் இந்த பகுதியில் எந்தவித தடுப்பு சுவரும் கட்டப்படவில்லை. அதேபகுதியில் சுமார் 22 அடி ஆழமுள்ள கிணறு, தண்ணீர் முழுவதும் நிரம்பிய நிலையில் சுற்றுச்சுவர் இல்லாமல் காணப்படுகிறது. திருச்சி சிறுவன் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் பல்வேறு பகுதியில் உள்ள ஆபத்தான ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டு வருகிறது. எனவே தவசிபெருமாள் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள கிணறு மூடுவதற்கும் கால்வாயில் தடுப்புசுவர் கட்டவும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: