பன்னம்பாறையில் புறவழிச்சாலை நில ஆய்வுப்பணி

சாத்தான்குளம், நவ.8:பன்னம்பாறையில் இருந்து அரசு கல்லூரி வரை 150 அடி அகல புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு நில ஆய்வுப்பணி முடிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதியில் இருந்து சாத்தான்குளம் வழியாக திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிக்கு அரசு பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இதில் விரைவாக செல்லும் வகையிலும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினரால் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதில் சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம்பாறை ஊராட்சிக்குள்பட்ட மாடத்தி அம்மன் கோயில் உள்ள பகுதியில் இருந்து சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரி வரை 150 அடி அகலத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பன்னம்பாறையில் தொடங்கும் சாலை சுப்பராயபுரம், தோப்புவளம், தச்சமொழி, காந்திநகர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சாத்தான்குளம் அரசு கல்லூரி  அருகில் வந்து நிறைவடையும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

Advertising
Advertising

சாலை அமைக்க நிலம் கையகப்படுத்திட நில ஆய்வு பணி நடத்தி தேவையான இடங்கள் என  எல்லைமால் கயிறு கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் தனியாருக்கு சொந்தமான தோட்டப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகளும் அடங்கும். இந்த இடங்கள் நில உடமைதாரர்களிடம் அரசு கையகப்படுத்தும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும் என தெரிகிறது. கிராமங்கள் வழியாக  புறவழிச்சாலை அமையும் பட்சத்தில் பஸ்வசதி இல்லாத பகுதிகளும் பஸ், வாகன வசதி பெரும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் சாத்தான்குளம் நகர பகுதிகளுக்குள்  திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிக்கு செல்லும்  சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வது குறையும் என மக்கள் கருத்து  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு தரப்பில் விசாரித்தபோது, இந்த சாலை அமைப்புக்கான  வரைப்படம் வெளியிடப்பட்டுள்ளன. நில ஆய்வு பணிகள் நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட பணிகள் அரசு அறிவித்தவுடன் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.  

Related Stories: