உடன்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி நவ.13ம்தேதி கடையடைப்பு, மறியல்

உடன்குடி, நவ.8: சுப்புராயபுரம் அணைகட்டு வழியாக உடன்குடி பகுதிக்கு தண்ணீர் திறக்கக்கோரி வரும் 13ம்தேதி கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடத்த அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள், வியாபாரிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். பல ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதாளபாதாளத்திற்கு சென்றது. இதனால் கடல் நீர் உட்புகுந்து உப்புநீராக மாறியது. உடன்குடியில் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டதையடுத்து மத்திய நீர்வளத்துறையினர் நடத்திய ஆய்வில் உடன்குடி பகுதி “வறட்சியான கருமைப்பகுதி” என ஆய்வறிக்கை சமர்ப்பித்தனர். இதனையடுத்து போர்வெல் அமைக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2009ல் சுப்பராயபுரம் பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டது. இதிலிருந்து உடன்குடி பகுதிக்கு காட்டாற்று வெள்ளமாக வரும் நீரை திறந்து விடவேண்டும். அதிகளவில் தண்ணீர் வரும் பட்சத்தில் தருவைகுளத்திற்கும் திறந்து விடலாம் என்ற பகிர்மானமும் உள்ளது.  
Advertising
Advertising

நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் கருமேனியாறு சுப்பராயபுரம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் மணிநகர், உதிரமாடன்குடியிருப்பு, தாண்டவன்காடு, சிறுநாடார்குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளை தாண்டி மணப்பாடு கடலில் காட்டாற்று வெள்ளம் கலக்க வேண்டும். ஆனால் 15ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் தண்ணீர் வரத்தில்லை. கடந்தாண்டு டிசம்பரில் நடந்த கூட்டத்தில் திருச்செந்தூர் ஆர்டிஓ அளித்த உத்திரவாதத்தின் அடிப்படையில் தண்ணீர் திறந்து விடவேண்டும். கருமேனியாற்றில் தண்ணீர் வந்து சடையநேரி கால்வாயிலும் செல்லும் போது பொதுப்பணித்துறையினரால் நிர்ணயிக்கப்பட்ட பகிர்மான அளவின்படி தண்ணீர் திறக்கவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன்குடிக்கு தண்ணீர் வரும் ஷட்டரை அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் கொதிப்படைந்த விவசாயிகள், வியாபாரிகள் அனைத்து கட்சியினர் பங்கேற்ற அவசரக்கூட்டம் உடன்குடியில் சங்க தலைவர் ரவி தலைமையில் நடந்தது. தெற்கு மாவட்ட பம்புசெட் விவசாய சங்க செயலாளர் ஆறுமுகபாண்டியன் வரவேற்றார். ஒன்றியசெயலாளர் அதிமுக முருங்கை மகாராஜா, திமுக பாலசிங், ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், காங்கிரஸ் வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப், மாநில அமமுக இளைஞர் பாசறை இணைச்செயலாளர் மனோகரன், மாவட்ட சேவா பாரதி தலைவர் கிருஷ்ணமந்திரம், மாவட்ட ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் குணசீலன் முன்னிலை வகித்தனர். இதில் கருமேனியாற்றில் உடன்குடிக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், சுப்பராயபுரம் அணைகட்டு வழியாக உடன்குடிக்கு முறையாக தண்ணீர் கொண்டு வர வருகிற 13ம்தேதி உடன்குடியில் முழுகடையடைப்பு நடத்தி மறியல் போராட்டம் நடத்த வேண்டும். உடன்குடி, புத்தன்தருவை மக்களிடையே நீர்வள ஆதார பிரச்னைகளை உருவாக்கி சமூக நல்லிணக்கத்திற்கு குத்தகம் விளைவிக்கும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

கூட்டத்தில் உடன்குடி வியாபாரிகள் சங்க செயலாளர் வேல்ராஜ், பொருளாளர் சுந்தர், முன்னாள் செயலாளர் கந்தன், திமுக ரவிராஜா, ஷேக்முகமது, அஜய், அமமுக ஒன்றிய செயலாளர் அம்மன்நாராயணன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் முத்துபாண்டியன், காங்கிரஸ் வெற்றிவேல், அருள்ராமச்சந்திரன், கன்னிமுத்து, மார்க்கிஸ்ட் ஒன்றிய தலைவர் ஆறுமுகம், இந்து மக்கள்கட்சி மாவட்டதலைவர் கணேசன், ஒன்றியதலைவர் தினகரன், கருமேனியாறு பாதுகாப்பு இயக்க தலைவர் அலெக்ஸாண்டர், அடைக்கலாபுரம் அருள்ராஜ், பாஜ பரமசிவம், நாம்தமிழர் டெனிட்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: