தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரிந்த 7 மாடுகள் சிறைபிடிப்பு

ஸ்பிக்நகர், நவ.8:தூத்துக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த 7மாடுகளை மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து அடைத்தனர். தூத்துக்குடியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் ஏராளமான கால்நடைகள் சுற்றித் திரிவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, பிரதான சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்து அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி பணியாளர்களுக்கு ஆணையர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைதொடர்ந்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருண்குமார் முன்னிலையில், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் தலைமையில் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் செண்பக பாண்டியன், ஜெயபாலன், முத்தையாபுரம் சிறப்பு எஸ்ஐ பிள்ளைமுத்து மற்றும் போலீசார் இணைந்து மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்றிரவு தூத்துக்குடி - திருச்செந்தூர் மெயின் ரோடு, முத்தையாபுரம் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் அவற்றை தெற்கு மண்டல நுண்ணுயிர் உரமாக்கும் மையத்தில் அடைத்தனர். 24 மணி நேரத்தில் மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5ஆயிரம் அபராதம் செலுத்தினால் மாடுகள் விடுவிக்கப்படும். தவறினால் மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால், பறிமுதல் செய்யப்படும் எனஅதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: