×

குந்துக்கோட்டை வனப்பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் விவசாய தோட்டங்கள் நாசம்

தேன்கனிக்கோட்டை, நவ.8:  தேன்கனிக்கோட்டை அருகே குந்துக்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள 5 கி.மீ., சுற்றளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால், 100க்கும் மேற்பட்ட விவசாய தோட்டங்கள் நாசமடைந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் சுட்டெரிப்பதும், இரவு முதல் விடிய விடிய பனிப்பொழிவும் நிலவுகிறது. சீதோஷ்ண மாற்றத்தால் சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேன்கனிக்கோட்டை பகுதியில், நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டியெடுத்த நிலையில், மதியம் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டது. ஆனால், மாலை வரை மழைக்கான அறிகுறி தென்படவில்லை. அதே வேளையில், தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளி மற்றும் குந்துக்கோட்டை, மல்லிகார்ஜூனா துர்க்கம் மலைப்பகுதி, ஏணிபண்டா, குருபரப்பள்ளி, சாலிவாரம் உள்ளிட்ட மலை கிராமங்களை ஒட்டிய சுமார் 5 கி.மீ., சுற்றளவில் மதியம் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த ராகி பயிர்கள் சாய்ந்து நாசமடைந்தன. மேலும் 100க்கும் மேற்பட்ட தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட தோட்டங்களையும் புரட்டி போட்டது.

குந்துக்கோட்டை மலை பகுதியில் பெய்த கனமழையால், அருகே உள்ள அடவி வங்கபள்ளத்தில் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பெய்த கனமழையால் எதற்கும் பயனின்றி, குந்துக்கோட்டை மலை அருகே காட்டாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் அஞ்செட்டி வனப்பகுதி தொட்டல்லா வழியாக ஒகேனக்கல்லுக்கு பாய்ந்தோடியது. தேன்கனிக்கோட்டை முழுவதுமுள்ள விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மட்டும் மழை கொட்டி தீர்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : gardens ,
× RELATED கனமழையால் ஊட்டி பூங்காக்களில் அழுகி உதிரும் மலர்கள்