×

வேலை வாய்ப்பில்லாதோருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி, நவ.8: வேலையில்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான நேர்காணல் வரும் 14ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் டாம்கோ மூலம் படித்த வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 50 பயனாளிகளுக்கு 3 மாதம் எம்பிராய்டரி பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ. ஆயிரம் பயிற்சி உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கான நேர்காணல் கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் எண். இ-5ல் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் வரும் 14ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி திட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ேவலைவாய்ப்பு அலுவலகத்தில் 29ம் தேதி...