×

சேலம் அருகே மாசிநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி மைய கட்டிடமேற்கூரை இடிந்து விழுந்தது

சேலம், நவ.8: சேலம் அடுத்த மாசிநாயக்கன்பட்டியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மேற்கூரை விழுந்ததால் குழந்தைகளின் பெற்றோர்கள் பீதியில் உள்ளனர்.  சேலம் அடுத்த அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையம் கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.  கடந்த 2012ம் ஆண்டு அங்கன்வாடி மையம் கட்டிடம் பராமரிப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் மேற்கூரை திடீரென விழுந்ததால் குழந்தைகளின் பெற்றோர்கள் பீதியில் உள்ளனர். இது குறித்து அப்பகுதி பெற்றோர்கள் கூறியதாவது: மாசிநாயக்கன்பட்டியில் பெரும்பாலானோர் கூலிவேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். வசதி குறைவாக உள்ளவர்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க இயலாத காரியம். இங்கு குழந்தைகளுக்கு மதியம் நேரம் சாப்பாடு கிடைத்து வருகிறது.

அதனால் கூலிவேலைக்கு செல்பவர்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பி வருகிறோம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. மேற்கூரை விழும்போது, அங்கு குழந்தைகள் யாரும் இல்லை. அந்த நேரத்தில் குழந்தைகள் மீது கான்கிரீட் விழுந்து இருந்ததால் பெரும் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். பெற்றோர்கள் அச்சமின்றி குழந்தைகளை அனுப்ப பழுதடைந்துள்ள அங்கன்வாடி மையம் கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் புதியதாக கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றோர்கள் கூறினர்.

Tags : Anganwadi ,center building ,Masinayakanpatti ,Salem ,
× RELATED புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு