×

பனிப்பொழிவால் வரத்து சரிவு ஓசூரில் கொத்தமல்லி விலை உயர்வு

ஓசூர், நவ.8: ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவால் கொத்தமல்லி, புதினா மகசூல் குறைந்துள்ளது. சந்தைக்கு வரத்து சரிந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதியான தேன்கனிக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக கொத்தமல்லி மற்றும் புதினா சாகுபடி செய்துள்ளனர். ஓசூர் பகுதியில் இதமான சீதோஷ்ணம் நிலவி வருவதால் ஆண்டு முழுவதும் புதினா, கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. தற்போது, ஓசூர் பகுதியில் பனிப்பொழிவு காணப்படுகிறது. கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு முன்பே மார்கழி போல் பனி கொட்டுகிறது. இதனால், கொத்தமல்லி மகசூல் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, சந்தைக்கான வரத்தும் பாதியாக குறைந்து, விலை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள்  கூறுகையில், ‘கொத்தமல்லி சாகுபடி செய்ய ஏக்கருக்கு ₹25 ஆயிரம் வரை செலவாகிறது. பயிரிட்டு 40  நாட்களுக்குள் பயன் தரும். இதன்மூலம் மிக விரைவில் வருவாய் கிடைக்கிறது. இதனால், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொத்தமல்லியை பயிரிட்டுள்ளனர். தற்போது, பனிப்பொழிவு காரணமாக மகசூல் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொத்தமல்லி தழை ஒரு கட்டு ₹2 முதல் ₹5 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ₹30 முதல் ₹40 வரை உயர்ந்துள்ளது. இங்கிருந்து கோவை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கொத்தமல்லியை அனுப்பி வருகிறார்கள்,’ என்றனர்.

Tags : Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...