×

மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோருக்கு பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி, நவ.8:   கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர் 256 பேருக்கு, இரண்டு நாள் பயிற்சி முகாம் கட்டிகானப்பள்ளிபுதூரில் நேற்று துவங்கியது. 2019-20ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 3,826 மாற்றுத்திறனாளிகள் அரசு பள்ளிகளிலும், 250 பேர் வீட்டு வழி கற்றலிலும், 204 பேர் பள்ளி ஆயத்தபயிற்சி மையங்களிலும் சேர்க்கப்பட்டு, சிறப்பு பயிற்றுனர்கள், பிசியோதெரபிஸ்ட் மூலம் சிறப்பு கல்வி மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மொத்தம் 4,280 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது மாற்றுத்திறனுடைய மாணவர்களின் பெற்றோர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் முகாமை துவக்கி வைத்து, பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர்கள் சேகர், கோவிந்தன் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியர் பயிற்றுநர் சீனிவாசன் வரவேற்றார். முகாமில் 21 வகையான மாற்றுத்திறன் தன்மைகளுக்கு அடையாள அட்டை பெறும் விதம், அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் விதம் குறித்து சிறப்பு பயிற்றுனர் அருண்குமார் விளக்கினார்.
இதில் பிசியோதெரபிஸ்ட் ரேணுகா, முருகன், ஜித்தன் மேத்யூ, சத்யா, நித்யகலா ஆகியோர் பயிற்சி அளித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ம் வகுப்பு வரை ₹1000 வீதம், 6 முதல் 8ம் வகுப்பு வரை ₹3 ஆயிரம் வீதம், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ₹4 ஆயிரம் வீதம், 12ம் வகுப்பிற்கு மேல் ₹6 ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. மேலும், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இலவசமாக பிசியோரெபி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Training Camp ,Parents ,Transitional Children ,
× RELATED பெரம்பலூரில் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி முகாம்