பெரிய ஏரிக்கு தண்ணீர் நிரப்ப சிங்களகோம்பை ஏரிக்கரை உடைப்பு

சேந்தமங்கலம், நவ.8: எருமப்பட்டி அருகே பெரிய ஏரிக்கு தண்ணீர் நிரப்ப, சிங்களகோம்பை ஏரிக்கரையை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்தனர். நாமக்கல்  மாவட்டம்,  எருமப்பட்டி  பகுதியில் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக சிங்கள கோம்பை ஏரி உள்ளது. சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு, மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து தண்ணீர் வருகிறது. எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள 17 வார்டுகளுக்கு, இந்த ஏரியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், 800 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், ஏரி நீர் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், கிழக்குப்புறம் உள்ள கடக்கால் பகுதியில், சிலர் ஏரியை உடைத்து பெரிய ஏரிக்கு தண்ணீரை திருப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிங்களகோம்பை ஏரிப்பாசன விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் சாராவிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வருவாய் ஆய்வாளர், விஏஓ கண்ணன் ஆகியோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் சென்று ஏரிக்கரை உடைக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும்  பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் யுவராஜ் கவனத்துக்கு, இப்பிரச்னையை கொண்டு சென்றனர். பின்னர், ஏரியில் கரை உடைக்கப்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி, தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்,  ஏரியின் கரையை  உடைத்தவர்கள் மீது கடும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்  வலியுறுத்தினர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : lake ,Sinhalese ,
× RELATED கொடைக்கானல் பேரிஜம் ஏரி செல்ல வனத்துறை தடை