தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தை ஜவுளி உற்பத்தியாளர்கள் புறக்கணிப்பு

பள்ளிபாளையம், நவ.8: விசைத்தறி  தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறைக்கப்பட்டது தொடர்பாக, சேலம்  தொழிலாளர் நலத்துறை ஆணையாளர் தலைமையில் நேற்று நடைபெற இருந்த  பேச்சுவார்த்தையை, ஜவுளி  உற்பத்தியாளர்கள் புறக்கணித்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் விசைத்தறி  தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை வழங்குவதில் உடன்பாடு ஏற்படவில்லை.  இதையடுத்து 9 சதவீத  போனஸ் வழங்குவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.  கடந்த ஆண்டை விட, அரை சதவீதம் போனஸ் குறைக்கப்பட்டதை ஏற்க மறுத்து, நாமக்கல்  மாவட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினர், சேலம் தொழிலாளர் நல அலுவலரிடம் முறையீடு  செய்தனர். இதையடுத்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி  முடிவு காண,  தொழிலாளர் நல ஆணையாளர் சங்கீதா, நேற்று (7ம் தேதி) பேச்சுவார்த்தைக்கு  ஆஜராகும்படி  உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று காலை 11 மணிக்கு,  தொழிற்சங்கத்தினர் ஆஜராகினர். ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில்,  பேச்சுவார்த்தையில்   யாரும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதையடுத்து 3வது சுற்று  பேச்சுவார்த்தை, வரும் 11ம்தேதி நடைபெறும் எனவும், இதில் விசைத்தறி தொழிலாளர்கள்  மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Textile manufacturers ,bonus talks ,
× RELATED சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்