×

அரசு மகளிர் கல்லூரி முன் குவிந்துள்ள குப்பை கழிவுகள்

நாமக்கல், நவ.8:  நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியின் முன் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சியில் 20 வார்டுகளில் குப்பை அள்ளும் பணிகள், தனியார் கான்ட்ராக்டர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களை, தினக்கூலி அடிப்படையில்  நியமித்து குப்பை அள்ளுகிறார்கள். நகரில் கடந்த ஓராண்டாக குப்பை தொட்டிகள் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் குப்பை கொட்டி வைத்து, அதை நகராட்சி லாரிகளில் ஏற்றி குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் சில இடங்களில் கொட்டி வைக்கப்படும் குப்பைகளை, பல நாட்களாக துப்புரவு தொழிலாளர்கள் அகற்றாமல் விட்டு விடுகிறார்கள்.  நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை அரசு மகளிர் கல்லூரி பின்புற வாசல் பகுதியில், பல நாட்களாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதேபோல பேருந்து நிலையம் மற்றும் திருச்சி ரோட்டில் உள்ள கடைகள் முன்பும், குப்பை கழிவுகளை தினமும் சேகரிக்கப்படுவதில்லை. தனியார் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள், கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதம் செய்வதும், தினசரி சண்டை போடுவதும் நடந்து வருகிறது
என கடைக்காரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, கல்லூரி முன்பு கொட்டப்பட்டுள்ள குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Government Women's College ,
× RELATED வீட்டின் முன்பு விளையாடியபோது பைக் விழுந்து குழந்தை பலி