ரேஷன் குறைகளை நிவர்த்தி செய்ய 13 கிராமங்களில் குறைதீர் கூட்டம்

சேலம், நவ.8: ரேஷன் கடை தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய நாளைய தினம், 13 கிராமங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பாக ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நாளில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் வட்டங்கள் வாரியாக நடத்தப்படுகிறது. இதன்படி நடப்பு மாதத்திற்கு நாளை (9ம் தேதி) 13 வட்டங்களில் தலா ஒரு கிராமத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் வட்டத்தில் வளையக்காரனூரிலும், சேலம் மேற்கு வட்டத்தில் பெத்தானூரிலும், சேலம் தெற்கு வட்டத்தில் வேம்படிதாளத்திலும், வாழப்பாடி வட்டத்தில் பெரியகுட்டிமடுவிலும், ஏற்காடு வட்டத்தில் அரண்மனைக்காடு கிராமத்திலும் நடத்தப்படுகிறது.

மேட்டூர் வட்டத்தில் புக்கம்பட்டி, ஓமலூர் வட்டம் துண்டுமானியம், ஆத்தூர் வட்டம் மும்முடி, கெங்கவல்லி வட்டம் பகடப்பாடி, சங்ககிரி வட்டம் ஏகாபுரம், எடப்பாடி வட்டம் இருப்பாளி, பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் பழனியாபுரி, காடையாம்பட்டி வட்டம் மோளக்கரட்டூர் ஆகிய இடங்களில், வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீர் கூட்டம் நடக்கிறது. இங்கு மக்கள் தங்களது ரேஷன்கார்டு தொடர்பான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: